Tags

,

இன்று பாரதியாரின் பிறந்த நாள். அவர் ஒரு மஹாகவி என்பது நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. இந்த வலைப்பதிவின் நோக்கம் இளையராஜாவின் இசையை பற்றிய எனக்கு தெரிந்த அம்சங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்வதே. பாரதியின் பிறந்த நாளான இன்று, அவர் எழுதி, ராஜா இசையமைத்த பாடல் ஒன்றை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பாடல்: நின்னை சரண் அடைந்தேன். படம்: பாரதி.

இப்படம் பாரதியின் வாழ்க்கையை சித்திரம் ஆக்கியது. இந்தப்பட பாடல்களை நோக்கும் பொழுது இவை படத்தில் அமைந்த காட்சி நிலை என்ன என்பதை பார்க்கும் கோணம் ஒன்று. அதனுடன் நிற்காமல் இவை பாரதி நிஜத்தில் எதை உணர்ந்து எழுதி இருக்கலாம் என்று சிந்திப்பதை இரண்டு வகையாக அறியலாம். ஒன்று, இது தேவையற்ற அலசல் என்று நிறுத்தி கொண்டு அமையலாம். இன்னொன்று, பாரதி எதை உணர்ந்து எழுதி இருக்கலாம் என்று சிந்தித்து, அந்த பாதையில் நம் சிந்தையை பயணிக்க செய்யலாம். அதிகாரபூர்வமான வரலாற்று பதிவு சாட்சியாக இருந்தால் ஒழிய நம் பயணம் பாரதி என்ன நினைத்திருப்பார் என்பதை நிச்சயமாக சொல்லிவிட போவதில்லை. இருப்பினும், அப்படி பயணிப்பது சுவாரஸ்யம் மிகுந்த ஒரு பயிற்சியாக நான் எண்ணுகிறேன். எனவே நின்னை சரண் அடைந்தேன் என்ற பாடலை இப்படத்தின் கோணத்தில் லேசாக நோக்கிவிட்டு, பாரதியின் பயணத்தை இளையராஜாவும் அதே பயணத்தில் இப்பாடலை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் என்ற என் கருத்தை பகிர்கிறேன்.

படத்தில் இப்பாடல் அமையும் தருணம் பாரதி தன் மனைவி மற்றும் மகள்களை பிரிந்திருப்பார். மனைவி செல்லம்மா அவர்கள் மகளான தங்கம்மாவின் திருமணத்தின் பொருட்டு பாரதியிடம் கருத்து வேறுபாடு கொண்டு தற்காலிகமாக மகள்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு பாரதியை விட்டு சென்று விடுவார். அப்பொழுது பாரதி தன் மகளான தங்கம்மாவை பிரிந்து, ஏங்கி தேடும் தருணத்தை விவரிக்க இந்த பாடல் அமைந்திருக்கும். எனவே, பாரதியின் மனத்தேடலை, இசை வடிவமாக மகளை நோக்கி அமைந்ததாக சித்தரிக்க பட்டிருக்கும். அதற்கான சொல்லும் இசையும் அழகாக பொருந்தவும் செய்தது என்று சொல்லலாம். இளையராஜா அற்புதமாக இசையமைத்து, பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக பாட பெற்று இந்த பாடல் நம்மை ஈர்பதாக இருப்பது என்பதே நிதர்சனம். ஆனால் என் கருத்தில், இளையராஜாவின் ஆளுமை என்பது பாரதி நிஜமாக எதை உணர்ந்து இதை எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பிறகு, அவர் எழுத்துக்களை இசை மூலம் பூரணிப்பதாக இருப்பதில் தான் வெளிப்படுகிறது. அதாவது, இசை படத்தின் கதை அம்சத்தை ஒரு புறம் பூர்த்தி செய்கிறது. மறுபுறம், பாரதியின் எழுத்துக்களை பூர்த்தி செய்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்பாடலில் பாரதியின் கருத்தும், படத்தின் கதை அம்சத்தில் இப்பாடலின் இடமும் சம்பந்த பட்டவையாகவும், அதே சமயத்தில் மாறுபட்டவையாகவும் நான் பார்க்கிறேன். இதற்க்கு பாரதி என்ன சொல்ல முயல்கிறார் என்பதை பார்ப்பது நன்று.

தேடல் என்ற அந்த மைய்யக்கருத்து பாரதியின் எழுத்துக்கும், கதை அமைப்பிற்கும் தொடர்பு. அதையும் மீறி உயர்ந்த இலக்கை உணர்வது என்பது பாரதியின் எழுத்து. படத்தில் மகளை தேடுகிறார். பாடலில் அவர் தன் தெய்வத்தை நாடி, ஆசைகளை பாடி யாசிக்கிறார். நான் இதை பார்க்கும் கோணம் அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி அல்ல. அவர் இதை பொதுவாக ஒரு பக்தனின் தேடலாக எழுதியிருப்பதாகவே காண்கிறேன்.

அவரது கண்ணம்மா மிக பிரபலம். பாரதி ஒரு கண்ணன் பக்தர். கண்ணனுக்கு அவர் பெண் வடிவம் குடுத்து, “அவளை” கண்ணம்மா என்று அழைத்து பல பாடல்களை பாடியதாகவும், கண்ணம்மா என்பவள் அவரது இளம் பிராயத்தில் ஒரு கனலாக வந்த பெண்ணென்றும் இரு வேறு கருத்துக்களை படித்திருக்கிறேன். கண்ணனின் பெண் வடிவம் என்ற கருத்தை அங்கீகரிக்கிறேன், அதில் ஒரு விதமான அழகு இருப்பதால். அப்படி அவர் கண்ணம்மாவை தன் காதலியாகவும், குழந்தையாகவும், தெய்வமாகவும் கற்பனை செய்து பாடல்கள் எழுதி, இசை அமைத்திருக்கிறார் (ஆம். அவருக்கு இசை ஞானமும் உண்டு). நின்னை சரண் அடைந்தேன் என்ற இந்த பாடலில் கண்ணம்மா அவர் குல தெய்வம்.

இளையராஜா இதை இசையமைத்த ராகம் புர்ய தனஸ்ரீ. இப்பாடல் அவர் குரலில் தான் துடங்கும். அதில் ஒரு ஏக்கமும் தேடலும் தென்படும். வரிகள் இவை:

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென்று… (நின்னை)

இதில் தேடல் சற்று லௌகீகமாகவே இருப்பது தெரிகிறது. அதை தேடும் பக்தன் தனக்கென தேடும் பொருட்டு, கவலைகள் (இன்னல்கள்) வராமலிருக்க தன் இஷ்ட தெய்வத்தை தொழுகிறான் என்று எடுத்துக்கொள்ளலாம். அது அவனுக்கு கிட்டுவதாகவே நான் பார்க்கிறேன். அதற்க்கு காரணம் அடுத்து வரும் சரணம். அது நிற்க. இளையராஜாவும் இதை உணர்ந்து கொண்டு பக்தனின் மன நிலையை இசையில் பிரதிபலிக்கிறார் என்று நான் கருதுகிறேன். இதற்க்கு சான்று முதல் இடை இசை. அதில் குழல் ஒரு சோகத்தையும், தேடலையும் தொடர்ந்து தருவதை உணரலாம். பக்தனுக்கு திருப்தி ஏற்படவில்லை என்பது தெரிகிறது. ஆசை பூர்த்தி ஆகாமலும் இது இருக்கலாம். ஆனால் லௌகீக ஆசைகள் பூர்த்தி ஆகியும் எவருக்கும் திருப்தி வருகிறததோ? ஆதலால் இது ஆசை நிறைவேறியும் திருப்தி அடையாத பக்தனின் தேடலாக தான் நான் காண்கிறேன்.

இதையே தான் அடுத்து வரும் வரிகளும் உணர்த்துகின்றன:

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சிற்

குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று… (நின்னை)

மிடிமை என்பது வறுமை. வறுமையும் அச்சமும் நெஞ்சில் குடிகொண்டது என்று பதறுகிறான் பக்தன். லௌகீக சுகத்தினால் நிறைந்த நிம்மதி ஏற்படாது. முதல் அடியில் ஆசை நிறைவேறவில்லை என்றால் அவன் லௌகீக ஆசைகளில் தான் உழன்று கொண்டிருப்பான். ஆனால் இங்கோ மன நிறைவை தேடுகிறான் அடுத்த அடியாக. இதனால் இந்த பாடலை ஒரு தேடல் பயணமாக காண்பது சரியே. அச்சத்தையும், மன வறுமையையும் கொன்று போக்குமாறு விண்ணப்பிக்கிறான்.

இதை பக்தன் அடைந்தானா? அடுத்த இடை இசையில் விடையை காட்டுகிறார் இசைஞானி. இம்முறை குழலின் இசையில் ஒரு அமைதி நிரம்புகிறது. இதை ஒரு முரண்பாடாகவும் எடுத்து கொள்ளலாம்.

தன்செயலெண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெரும் வண்ணம்… (நின்னை)

அந்த இசை போக்கின் நோக்கம் வெளிப்படை ஆகிறது. லௌகீக சுகத்தை கண்ட பக்தன் மன நிறைவை தேடி, பாதையை கண்டு விட்டான். தன்செயலை செய்தவன், இப்பொழுது கண்ணம்மா என்கிற தெய்வத்தின் செயலை செய்ய, அது தன் மன மிடிமையை போக்கி, நிறைவை தருவது என்று நிதர்சனமாக கூறுகிறான். இதை பரோபகாரமான நின்செயலாக பார்த்தாலும் மிக பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. லௌகீக சுகத்தை தேடிய ஒருவன், தெய்வத்தின் துணையால் ஆன்மீக படிகளை தாண்டி மனத்தை நிரப்பி வென்றுவிட்டான்.

இனி என்ன? இதையும் கோடிட்டு காட்டுகிறார் இளையராஜா. செண்டை கொட்டுகிறது தாளத்தை. தாளக் கட்டில் இந்த திடீர் மாற்றம் அடுத்த சரணத்திலும் தொடர்ந்து, வார்த்தைகளை பின் தொடர்வதை காண்கிறோம்.

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை

சோர்வில்லை, தோற்பில்லை

நல்லது தீயது நாம் அறியோம்

நாம் அறியோம், நாம் அறியோம்

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது நாட்டுக! தீமையை ஒட்டுக… (நின்னை)

இங்கு செண்டை கொட்டுவது ஒரு வெற்றி கூத்தை! இதையே வெளிப்படையாக வார்த்தைகளில் காண்கிறோம். பக்தன் தன் இலக்கை அடைந்து விட்டான், கண்ணம்மாளின் துணை கொண்டு. அதனால் அவளிடமே சரணாகதி அடைகிறான். முதலில் வெளி சுகத்தை தேடியவன், மன நிறைவை தேடி அதையும் அடைந்து, எதுவும் தன்னால் ஆகவில்லை, இரண்டும் அவளால் ஆனதுவே என்று கண்டு இந்த முடிவுக்கு வருகிறான். அந்த வெற்றியுடன் நிற்காமல், அவளையே இனி வரும் பாதையையும் அன்பு மிக்கதாய் காட்ட அற விண்ணப்பம் வைத்து அமைகிறான். அதுவும் அவனுக்கு வழங்க பட்டதாக நான் அறிகிறேன், இளையராஜாவின் கொட்டும் செண்டையினால்.

இந்த பாடலில் ஒரு தர்க்க வளர்ச்சியை (logical growth) காண்கிறோம். அதை கண்டால் மட்டுமே இந்த இசை வெளிப்படும். பாரதியின் சொல் ஆளுமைக்கும், கருத்து மேன்மைக்கும் தன் இசை ஆளுமையை கொண்டு எளிமையாகவும், அதே சமயத்தில் ஆழ்ந்த புரிதலுடனும் இளையராஜா நியாயம் செய்தது எனக்கு பிரம்மிப்பூட்டுகிறது.

பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில்:

இளையராஜாவின் குரலில்:

படத்தில்: